Monday, November 10, 2008

எங்கே செல்கிறோம் ????

நானும் "blog" எழுதறேன் அப்படீன்னு சொல்வதற்காக இந்த "blog" எழுதல. என் அனுபவங்களை பதிவு செய்யனும்னு எண்ணம் வந்ததால இத எழுதறேன்.

என்னிக்கும் போல இந்த திங்கட்கிழமையும் ஆபீஸ்-க்கு லேட்டாதான் கிளம்பினேன் (பெங்களூர் குளிர் தான் காரணம் , அதனால்தான் தூங்கறேன்னு சொல்லுவேன்). அவசரஅவசரமா "45B" பஸ் பிடிச்சு, ஜன்னல் சீட் பிடிச்சு உட்கார்ந்து , அப்பாடீன்னு பாட்டு கேட்க ஆரம்பிச்சேன். ஒரு 20 நிமிடம் போயிருக்கும், திடீர்னு பின்னாடிலேர்ந்து அப்படி ஒரு சத்தம். திரும்பிப்பார்த்தா ஒரு ஆள் வலிப்பு வந்து துடித்துக்கொண்டிருந்தார். வலிப்பு வருவதென்பதோ ஒன்னும் புதுசு இல்லைதான். ஆனால் எனக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. முதல் காரணம் இதுதான் - அந்த பஸ்- அவ்வளவு கூட்டம் இருந்தும் அவரை பிடிக்கவந்தது என்னவோ 2 பேர்தான். அந்த பஸ்- அதிகபட்சம் 10 பேர் அதிர்ச்சி ஆகியிருப்பங்க. மற்ற யார் முகத்திலும் பதற்றம் இல்லை. எனக்கு இரண்டு சீட் முன்னால இருந்த ஒருபெண்மணி தண்ணி பாட்டில் எடுத்து கொடுத்தாங்க. கன்டக்டருக்கு இது எல்லாம் ரொம்ப பழக்கம் போல. நான் சொல்லறத பார்த்து அவர் ஏதோ வலிப்புக்கு வைத்தியம் பார்த்தாருன்னு நினைக்க வேண்டாம். அவர் செஞ்சது எல்லாம் சினிமா பார்த்துத்தான். யார் கிட்ட இரும்பு சாவி இருக்குன்னு கேட்டு அத வாங்கி கையில கொடுத்தாரு. வலிப்புக்கு வைத்தியம் இரும்புச்சாவிதான்னு, பல துறையிலும் வெற்றி நடை போடும் இந்த 2008-லும் நம்புகிற ஆட்கள் எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தாங்க. வலிப்பு வந்தா அந்த ஆளை ஒருக்களித்து படுக்க வைக்க வேண்டும் , அவங்க எதிலும் போய் இடிச்சுக்காம பிடிச்சுக்கனும்,அவங்க பற்களை கடிக்காம இருக்க அவங்க வாயில ஒரு பொருளை வைக்கனும், இப்படி எதுவும் செய்யாம, அவங்க செய்ததோ கையில் சாவி எடுத்துக் கொடுத்தது ஒன்று தான். இவ்வளவு பேசறியே, நீ என்ன பண்ணன்னு நீங்க கேக்கறது என் காதுல விழுது. சொல்லறேன், நான் என்ன பண்ணேன்னு. அவர பிடிச்சிடிருந்த ஆள் கூட, என் தாய்மொழியாம் தமிழில் பேச (இல்லை, தமிழில் எப்படியாவது பேசி புரியவைக்கனும்னு முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிட்டிருந்தேன் ). ஆங்கிலமே பேசாத ஜெர்மனி, பிரான்சு போன்ற ஊர்களில் சுத்தினப்போதுக்கூட புரியாத "மொழியின் அருமையை " அன்னிக்குதான் புரிஞ்சுக்க முடிஞ்சுது. நம்ம நாட்டுல, தமிழ் நாட்டுக்கு அருகில் இருக்கும் கர்நாடகாவில் என்னால நான் நினைப்பதை புரிய வைக்க முடியல. இவ்வளவு நாள் கன்னட மக்கள் பேசும் போது முக பாவனை, கை அசைவு கொண்டு ஏதோ சமாளித்தேன். ஆனால் இந்த மாதிரி நேரத்தில், என் முகத்தை பார்த்தும், கை அசைத்தும் பேச வேண்டும்னு எப்படி எதிர்பார்க்க முடியும்? அப்பொழுதுதான் கன்னடம் படிக்கறதுன்னு சபதம் எடுத்தேன். (இது என்ன "சிவகாமி சபதம்"-, என்னோட சபதம் தானே. எத்தனை நாட்களுக்குன்னு பார்க்கலாம்).
ஒரு வழியா அவர் ஓரளவு சரியாகி சாய்ந்து உட்கார்ந்தார். அவருக்கு முகத்துலலேசா தண்ணி தெளித்து, ஜன்னல் ஓரம் உட்கார வைத்தோம். இத்தோடு முடிந்துவிடவில்லை. இனிமேல் தான் பிரச்சனையே . தளர்ந்து உட்கார்ந்த அவரால் எதுவும் சரிவர பேச முடியவில்லை. இதற்கு நடுவில், அவரோட பாக்கட்- address தேடினேன். அவர் மொபைல் எடுத்து என் கூட இருந்தவர் கிட்ட கொடுத்துப் பேசச்சொன்னேன். அவர் யார்கிட்ட பேசினார்னு தெரியல - எனக்கு எந்த address- உம் வாங்கிக்கொடுக்கல. வலிப்பு வந்தவர் பாக்கெட்-இல் இருந்தது அந்த mobile- உம் , "னமுற்றோர்" பாஸ் மட்டும் தான். தனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரிந்தும் அவர் ஒரு முகவரியோ, visiting card- வைத்திருக்கவில்லை. இவரை இப்போ குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை. இப்படி எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் பயணம் செய்யும் ஆட்களுக்கு சொன்னால்தான் புரியுமா?? அடுத்ததாக அவரிடம் வீட்டு முகவரி கேட்கும் முயற்சியில் இறங்கினோம். அவரோ தான் பெங்களூர் சேர்ந்தவரே இல்லை, தான் ஐத்தராபதிலிருந்து வருவதாகக் சொல்லி எங்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். (நான் அவரிடம் தமிழில் முகவரி கேட்க, அவர் ஏதோ நான் அவர் வீட்டை கொள்ளை அடிக்க வந்தவள் போல் என்னை பார்த்து பயந்தது தனிக்கதை) இப்படியே கடைசி stop-உம் வந்துவிட மக்கள் இறங்கத்தொடங்கினார்கள். அவரை அப்படி விட்டுப் போக மனசில்லாமல் நான் அங்கு நின்றேன். என் கூட இருந்தவரோ என் பேர், வேலை பார்க்கிறேனா என்று கேட்டு இறங்கிச் சென்றுவிட்டார். என்ன செய்யவேன்றுத் தெரியாமல் நான் கண்டக்டரிடம் போய்ச் சொன்னேன். அவரோ "உனக்கு என்ன வந்தது. மக்கள் பஸ்ஸினுள் ஏறனும். தொந்தரவு செய்யாதே " என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தார். நானும் பஸ்ஸிலிருந்து இறங்கி கீழே நின்றேன். அவரோ (வலிப்புவந்தவர்) இறங்குவது என்ற எண்ணமே இல்லாமல் உட்கார்ந்திருந்தார். அந்த 45B பஸ் தான் வந்த வழி செல்ல, driver கிளப்பியதும் கிளம்பியது. அதைப்பார்த்ததும் நான் ஓடத் தொடங்கினேன் - அந்த 45B பஸ்ஸை பிடிப்பதற்காக அல்ல, என்னை விட்டுச் செல்ல தயாராகிக்கொண்டிருந்த 314 பஸ்ஸில் ஜன்னல் சீட் பிடிப்பதற்க்காக அதன் பின்னால் ஓடினேன். என்னுடைய கேள்விக்கு நானே பதிலைக் கண்டுபிடித்தேன். எங்கே செல்கிறோம் - அவர் அவர் பஸ்ஸை பிடிப்பதற்குத்தான்!!!