அன்னிக்கு என்னோட ஜாதிய காரணம் காட்டி மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் மறுக்கப்பட்ட போது, நான் சரியாய் படிக்கலைன்னு நினைத்தேன். அதுக்கு அப்புறம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிச்சு, வேலைக்கு வந்து இப்போ 5 வருடம் ஆச்சு. ஆனால் நான் வந்த பாதையில நிறைய அனுபவங்கள். நிறைய புது விஷயங்கள் பார்த்தேன். முதல் முதலா வீட்டில் இருந்து வெளிய தங்கி கல்லூரி படிப்பு படித்த போது, ஊர் மாறி, பல company மாறி வந்த போது பல வித்தியாசமான மனிதர்களை சந்திக்க நேர்ந்தது. அந்த பயணத்துல என்னோட மனசுல ஒரு கேள்வி எழுந்தது - ஜாதி என்றால் என்ன? இந்த கேள்விக்கு என்னால பல நாள் விடை கண்டு பிடிக்க முடியாம இருந்தது. அமெரிக்காவில் கறுப்பர்கள் கொடுமை படுத்தப் பட்டபோது துடித்த நாம், பக்கத்து வீட்டு ஆளை கீழ் ஜாதி என்று ஒதுக்கினோம். அமெரிக்காவில் twin tower இடிச்சு பல நூறு பேர் இறந்த போது சீற்றம் கொண்ட இந்தியன், இங்கு கிராமத்தில் ஜாதி பேரை சொல்லி பல நூறு பேர் இறந்த போது கண்டுகொள்ளவில்லை. இப்படி முரண்பட நடந்து கொள்ளும் நம் நாட்டு மக்களின் எண்ணம் எனக்கு ஆச்சரியம் கொடுத்தது.
ஜாதி எதுக்காக கண்டுபிடிக்கப் பட்டதுன்னு ரொம்ப யோசிப்பேன். சரி, நிறைய மக்கள் படிச்சிருக்காங்க, இன்னிமே யார் ஜாதி பத்தி பேச போறாங்கன்னு நினைச்சேன். ஆனால், திரும்பிப்பார்த்தா பத்துல நாலு பேராவது ஜாதி பத்தி பேசினாங்க. ரொம்ப யோசிச்சப்பிறகு, கடைசில எனக்கு கிடைத்த பதில் - மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஆறாம் அறிவு (6th sense) தான் பிரச்சனை. ஏன் இப்படி சொல்லறேன்? மிருகங்களுக்கு இந்த ஆறாம் அறிவு இல்லை. அதுனால அவை என்ன வாழ்க்கை வரையறுக்கப்பட்டு இருக்கிறதோ அதை தான் வாழ்கின்றன. உதாரணத்துக்கு சிங்கம், ஒரு ஆண் சிங்கம் இருக்கும் போது இன்னொரு ஆண் சிங்கம் கூட்டத்துக்குள்ள வரது இல்ல, ஆண் சிங்கத்துக்கு நான் ஏன் இரை தேடணும்னு பெண் சிங்கம் கேக்கறது இல்ல, சிங்கக்குட்டி பிறந்ததும் அவை வளரும் வரை நான் ஏன் உணவும், பாதுகாப்பும் கொடுக்கணும்னு ஆண் சிங்கம் கேக்கறது இல்ல, சிங்கம் துரத்துவதால் நாங்க ஏன் ஓடணும்னு முயல் துப்பாக்கி பிடிக்கறது இல்ல, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக முயல் ஓடிட்டுதான் இருக்கு. ஏன் என்றால், இதுதான் நியதின்னு மிருகங்கள் வாழுகின்றன. அவை சிந்திப்பது இல்லை. இயற்கை சூழல் மாறும் போது கொஞ்சம் மாற்றிக்கொள்கின்றன. அப்படி மாற முடியா மிருகங்கள் அழிந்து விடுகின்றன. ஆனால் மிருகங்கள் மனிதனைப்போல இயற்கையை மாற்ற முயற்சி பண்ணறது இல்லை.
ஆனால் மனிதன், அவனுக்கு சிந்திக்க வேண்டும், சிந்திப்பதால் எல்லா செயலுக்கும் காரணம் வேண்டும், காரணம் கண்டுபிடித்து விட்டால் அவன் போற்றப்பட வேண்டும், போற்றப்பட்ட மனிதன் உயர்ந்தவன் ஆகிறான், போற்றியவன் தாழ்ந்தவன் ஆகிறான். உயர்ந்த மனிதன் தான் உயர்ந்ததால் அதை நிலை நிறுத்திக்கொள்ள வழிகள் கண்டுபிடிக்கிறான். அவன் கண்டுபித்த வழிகளை பின்பற்ற சிலர், பின்பற்றாத சிலர் - அவர்கள் ஒரு புதிய தலைவனை கண்டுபிக்கிறார்கள். இப்படியே மனிதன் நீயா நானா என்று போட்டி போடுகிறான். என்னைப் பொறுத்த வரை, இந்த போட்டி, "நான்" என்ற அகந்தை இதுதான் ஜாதிகள் உருவாக காரணம்.
அது எப்படி நடக்கிறது? அந்த காலத்தில், அதாவது மனிதன் மனிதனாக இருந்த காலத்தில், வேதங்களும் உபநிடதங்களும் தோன்றிய காலத்தில், மனிதனிடம் 4 ஜாதி இருந்தது - பிராமணன், க்ஷத்ரியன், வைஷ்ணவன், சூத்திரன் - அந்த பிரிவு அவன் செய்யும் வேலையை மட்டுமே பொறுத்து இருந்தது. அந்த அந்த ஜாதிக்கு சில வழக்கங்கள் இருந்தது. அந்த வழக்கங்கள் அவன் செய்யும் வேலைக்கு உதவியாய் இருந்தது. உதாரணம், பிராமணம் மாமிசம் சாப்பிட மாட்டான். ஏன் என்றால், அவன் உணவில் நாட்டம் காட்டினால் கோவில், கல்வி போன்றவற்றில் நாட்டம் குறையலாம். க்ஷத்ரியன் ஆய கலைகள் 64 ஐ கற்பதில்லை.
அவனுக்கு தேவை வீரமும், போர் நுணுக்கமும் தான். சூத்திரன் பள்ளிக்கு போவதில்லை - ஏன் என்றால் அவனுக்கு தேவை உழைப்பதற்கான உடல் வலு. இப்படி ஒவ்வொரு ஜாதியினரும் ஒரு முறையை பின்பற்றினர். நன்கு கவனித்தால் நமக்கு புரியும், ஒவ்வொரு வழக்கமும் ஒரு ஜாதிக்கு வசதியான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொடுத்தே தவிர மற்றொரு ஜாதி மனிதனை துன்புறுத்த அமைக்கப்படவில்லை. ஆனால் போகப் போக மனிதன் மாறினான். அவன் எண்ணங்கள் மாறின. பல வித அனுபவங்களை பெற்ற மனிதன், தனக்கென்று ஒரு வழி வேண்டும் என்று சிந்திக்கத்தொடங்கினான். அந்த சிந்தனை செயல் வடிவில் வந்தது. ஒரு வரை முறை வகுக்கப்பட்டது. இங்கு தான் பிரச்சனையே. 1 கோடி மக்கள் இருந்தால், அந்த 1 கோடி மக்களும் ஒரே மாதிரி சிந்திப்பது இல்லையே!! சிலருக்கு வடிக்கப் பட்ட அந்த வழி முறைகள் பிடிக்கவில்லை. நான் ஏன் மற்றவன் சொல்லை கேட்க வேண்டும். என் சொல்லை மற்றவர்கள் கேட்கட்டுமே என்று நினைக்க - அதன் விளைவு - மற்றொரு கிளை வழி முறைகள் தோன்றியது. இப்பொழுது 2 வழி முறைகள், 2 விதமான மனிதர்கள். மனிதன் இப்பொழுது தான் செய்யும் தொழிலை மறந்து, மனதுக்குப் பிடித்த வழி முறை எதுவோ அதை பின்பற்றத்தொடங்கினான். சரி, அத அப்படியே விட்ருக்கலாம். ஆனால், மனிதனால் தான் சும்மா இருக்க முடியாதே. மறுபடியும் வழி முறை மாற்றம் - இன்னொரு புது கிளை, அந்த கிளைக்கு ஒரு தலைவன். இப்படியே யார் யார்க்கு எல்லாம் அந்த கிளையின் சட்டங்களும், வழி முறைகளும் பிடிக்கலையோ, அவன் ஒரு புது கிளையை உருவாக்கினான். அவனை பின் பற்றி சிலர். இப்படி ஆரம்பித்த கதை தான் ஜாதி. ஒவ்வொரு ஜாதியினரும் அவர்களுக்கு பிடித்த முறைகளை பின்பற்றினர். அவற்றில் சில நல்ல வழக்கங்களாகவும், சில தீய வழக்கங்களாகவும், சில நடுநிலையான வழக்கங்களாகவும் இருந்தன. வழக்கம் எப்படி இருந்தால் என்ன, அந்த ஜாதி மக்களுக்குத் தான் அது பிடித்து விட்டதே. அதனால் அவை மற்றொரு தலைவன் வரும் வரை பின் பற்றப்படது.
இப்போ இன்னும் பிரச்னை பூதாகாரமானது. புதிய தலைவன், பழைய தலைவனின் எதிரி ஆகின்றான். ஆட்டு மந்தை போல சேர்ந்து சுத்திக்கொண்டிருந்த மனிதன், இப்போது கீரியும் பாம்பும் போல மாறுகிறான். நானே தலைவன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் - "நான்" என்ற எண்ணம். அதற்காக மற்றவனை அழிக்க முயற்சி செய்கிறான். இப்படித்தான் கலவரம், கொலை, எல்லாவற்றையும் தாண்டி மேலும் மேலும் புதிய ஜாதிகள்.
காலம் மாறிக்கொண்டே தான் இருந்துது. காலப்போக்கில் ஜாதி ஏன் வந்தது என்பதை மனிதன் மறந்து விட்டான். தன்னுடைய ஜாதி வழக்கங்களில் தாத்பரியத்தை மறந்து விட்டான். ஆனால் அவனுக்கு ஞாபகம் இருந்தது எல்லாம் ஜாதி பெயர் மட்டும் தான். தன் வழக்கம், தன் ஜாதி, தன் இனம் என்று பேச தொடங்கிய மனிதன், மற்ற ஜாதியினரும் மனிதன் தான் என்பதை மறந்தான். அவனுக்கு தன் ஜாதியின் சடங்குகள் பிடிக்காவிட்டால், அந்த ஜாதிக்குள் உட்பிரிவு கண்டுபிடித்தான். எவ்வளவு படித்தாலும், ஜாதி என்பதை மறக்க மறந்தான். பேர்களுக்குப் பின்னல் இருந்த ஜாதிப் பேரை எடுத்தாலும், தெருக்களில் இருந்த ஜாதி பேரை எடுத்தாலும், மனதில் இருக்கும் ஜாதி உணர்வை மேல மேலும் வலுப்படுத்திக் கொண்டுதான் போனான்.
யார் ஒரு புது மனிதனை சந்தித்தாலும் எப்படியாவது அந்த மனிதன் நம் ஜாதி தானா என்பதை தெரிந்து கொள்ள காட்டின ஆர்வம், அந்த புது மனிதன் நல்லவனா, கெட்டவனா என்பதை தெரிந்து கொள்ள காட்ட வில்லை.
அன்று ஜாதிகளுக்கு கொண்டுவரப் பட்ட விதி முறை இந்த காலத்துக்கு ஒத்துவரவில்லை. ஒத்து வரவில்லை என்றால் புது ஜாதி கொண்டுவர பொறுமை இருக்கும் மனிதன் புது ஜாதி கண்டுபிடிக்கிறான். பொறுமை இல்லாதவன், பிடிக்கிறதோ பிடிக்கலையோ அந்த வழக்கங்களை பின் பற்றுகிறான் (காரணம் கூட தெரியாமல்). அன்று சிந்தித்த மனிதன், இன்று சிந்திக்க மறந்து விட்டான். கேட்டால் நேரம் இல்லை, வழி முறைகளை மாற்றினால் சமுதாயம் கேள்வி கேட்கும் - அதற்கு யார் பதில் சொல்லுவது போன்ற உணர்வு. மனிதன் இன்னும் 200 ஆண்டுகளுக்குப் பிறகு சிந்திக்க மறந்தால் பரவாயில்லை. ஏன் என்றால் அப்போ எல்லாம் robots உலகம் ஆகிவிடும். ஆனால் இப்பொழுதே இதை பற்றி சிந்திக்க மறந்தால் 200 ஆண்டுகள் நம் இந்தியாவில் மனிதன் இருப்பானா என்பதே சந்தேகம் தான். இன்று பார்த்தால் ஜாதி கட்சி, ஜாதி வோட்டு, ஜாதி அரசியல், ஜாதிக்கு கல்வி, ஜாதிக்கு ஒதுக்கீடு, ஜாதிக்காக சடங்கு, ஏன் ஜாதிக்காகதான் இந்த மூச்சு என்று கூட வாழும் மக்கள்.
இன்னும் கொஞ்சம் யோசித்தால் இந்த பிரச்னை தலை விரித்து ஆடுவது தென் இந்தியாவில் தான். வட இந்தியாவில் இந்த பிரச்னை இல்லை. மேற்கத்திய நாடுகளிலோ நிச்சயம் ஜாதி பிரச்னை இல்லை. ஆனால் அதற்கு வேறு பெயர் - racism. ம்ம் அது நமக்கு தேவை இல்லை. வட இந்தியா எப்படி தப்பித்தது - கஜினி, துக்ளக், பாபர் தாக்கியது, ஏன் ஆங்கிலேயன் தொடங்கிய East India Company கூட வட இந்தியாவில்தான். பாவம் அவர்கள், சுதந்திரத்துக்காக பாடு படவே நேரம் போதவில்லை. இதில் எங்க ஜாதிகள் உருவாக்குவது. ஆனால், அவர்களை ஜாதியை விட கொடுமையான பேய் - மதம், தீவிரவாதம் என்னும் பெயரில் ஆட்டி வைக்கிறது. மதம் பற்றி பேச இந்த blog பத்தாது. தென் இந்தியாவிலோ அங்கு அங்கு சுதந்திரப்போராட்டம். ஆனால் வடக்கை போல இல்லை. கொஞ்சம் நேரம் அதிகமாகவே இருந்தது. நேரத்தை வீண் அடிக்காமல் ஜாதிகளை கண்டுப்பிடித்தோம்.
சரி, இப்போ என்ன சொல்ல வரன்னு கேக்கறீங்களா? அதுதான் எனக்கும் தெரியல. ஜாதி எதற்கு அப்படீங்கற கேள்விக்கே இப்போதான் பதில் தெரிஞ்சிருக்கு. (என்னக்கு வேறு சரியான பதில் கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன்.) அதை எப்படி ஒழிக்கறது, அப்படீங்கற பெரிய கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கறதுக்குள்ள, தெருக்கு ஒரு ஜாதி வந்துடும். எந்த ஆறாவது அறிவு இந்த பிரச்சனையை கொண்டுவந்துதுதோ அதே ஆறாவது அறிவு சரியாக பயன்படுத்தப்பட்டால் இந்த பிரச்சனை தீரலாம். என்னால சொல்ல முடிஞ்சது எல்லாம் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" (நான் சொல்லல - நம்ம முண்டாசு கவிஞன் சொன்னதுதான்) அப்படீங்கறது மட்டும் தான். ஏன்னா, நம்ம ஊர்ல ஜாதி தெரியாம இருக்கறது அந்த ஒரு வயசு குழந்தைகள் தான்.