Sunday, February 21, 2010

கொலை

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை  
என்னோற்றான் கொல் எனும்சொல்

- இது திருக்குறளில் வள்ளுவன் சொல்லிச் சென்றது.

இதன் பொருள் " ஒரு மகன் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை, இந்த மகனை பெறுவதற்கு அந்த பெற்றோர் என்ன தவம் செய்தனரோ என்று சுற்றம் பேசும் அளவு பெருமை தேடித் தருவதே ஆகும்".

வள்ளுவன் குறளில் 1330 குறள் இருக்க, எனக்கு இந்த குறள் மீது மட்டும் என்ன இவ்வளவு ஆர்வம்?

உலகப் பொதுமறையாம் திருக்குறள் - இதற்கு அர்த்தம் - வள்ளுவன் எழுதிச் சென்ற ஒவ்வொன்றும் நம் நாட்டு மக்களுக்கு மட்டும் இல்லாமல், உலகில் உள்ள அனைவருக்கும், எல்லா காலத்திற்கும் பொருந்தும். அதனால் தான் திருக்குறளை "உலகப் பொதுமறை" என்று கூறுகின்றோம். அப்படி இருக்க இந்த ஒரு குறள் (எனக்குத் தெரிந்து) நம் நாட்டு, (குறிப்பாக தென் இந்திய மக்கள்) மக்களை பெரிதும் பாதித்துள்ளது. ஏனோ இந்த குறள் நம் நாட்டுப் பெற்றோர்கள் மனதில் ஆழ பதிந்து விட்டது. ஆனால் இந்த குறள் சரியான பொருளோடு நம் மக்களால் புரிந்து கொள்ளப் படவில்லை. அதனால் தான் இந்த குறள் என்னையும் மிகவும் பாதித்தது.

ஏன் இப்படி சொல்லறேன் - நம் நாட்டுப் பெற்றோர்கள் இந்த குறளை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று? காரணம் இதுதான் - நம் நாட்டில் பெருமை என்ற சொல்லுக்கு மிகவும் குறுகிய பொருளே. நம்மை பொறுத்தவரை பெருமை என்பது - நம் உறவினர், பக்கத்துக்கு வீட்டுக்காரர், நம் office-யில் நம் கூட வேலை செய்பவர்கள் - நம்மைப் பார்த்து "இவன் கொடுத்து வைத்தவன் என்று சொல்ல வேண்டும். பொறாமை பட வேண்டும்".அப்படி நடந்து விட்டால் அது பெருமை. இல்லையென்றால் நாம் செய்த விஷயங்களில் ஏதோ தவறு இருக்கிறது. அந்த சிலர் மற்றவர் பார்வைக்காக மட்டும் வாழ்பவர்கள். சிந்திக்க மறந்தவர்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லுவார்கள் என்ற ஒரு சிந்தனை தவிர வேறு ஒன்றும் இல்லை.

சரி, அவர்கள் மற்றவர்களுக்காக வாழ்பவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படிதான் உலகம் இருக்கப் போகிறது என்றே வைத்துக் கொள்வோம். அவர்கள் பெருமை என்று நினைக்கற விஷயங்களை பற்றி பார்த்தால் - அங்கு தான் பிரச்சனையே. தன் பிள்ளை B.E, M.B.A (இது புது மோகம்), M.B.B.S படித்தால் மட்டுமே பெருமை. தன் பிள்ளை U.S. based company-யில் வேலை பார்த்தால் மட்டுமே பெருமை. அதுவும் அந்த கம்பெனி எல்லோருக்கும் தெரிந்த கம்பனியாக இருக்க வேண்டும் - HP, DELL போன்று. இல்லாவிட்டால் Infosys, WIPRO-வில் வேலை பார்க்க வேண்டும். அவர்கள் பிள்ளை வெளி நாடு கண்டிப்பாக செல்ல வேண்டும். அதில் தான் எவ்வளவு பெருமை!! அவர்கள் வருடம் குறைந்த பட்சம் 6 lakhs சம்பாதிக்க வேண்டும். வேலைக்கு போனதும் 2 வருடத்தில் வீடு வாங்க வேண்டும். அதற்குப் பின் அவர்கள் சொன்ன பையனையோ, பெண்ணையோ திருமணம் செய்துகொள்ள வேண்டும் - அதிலும் அந்த பெண்ணும் வேலைக்கு போக வேண்டும். வீட்டில் வேலை ஆட்கள் வைத்துக் கொண்டு பிள்ளைகளை கவனிக்க வேண்டும். நம் பெற்றோரில் எத்தனை பேர் இந்த சிந்தனை இல்லாமல் இருக்கிறார்கள்?

ஆக இதுதான் பெருமையா? B.Sc Chemistry, B.Sc Agri, B.A Tamil - இது எல்லாம் படிக்கும் பிள்ளைகள், அம்மா அப்பா மற்றும் உறவினர்களிடம் பாசம் காட்டும் பிள்ளைகள், மற்றவர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகள் - பல பெற்றோர் கண்களுக்கு பெருமை தேடித் தருவதில்லை.

தான் பெற்ற பிள்ளை தனக்கு பெருமை தேடித் தர மட்டும் தான் என்ற எண்ணம் மிக கொடுமையானது. பிள்ளைகளுக்கும் மனசு உள்ளது, அறிவு உள்ளது. பெற்றோர்களின் இந்த பெருமை என்ற சொல்லுக்காக அழியும் பிள்ளைகள் நம் நாட்டில் ஏராளம். அந்த தோல்வியை அந்த பிள்ளைகளும் ஏற்றுக் கொண்டு அடுத்த சந்ததியினர் ஆக மாறுகின்றனர். மறுபடியும் அதே எண்ணங்கள் கொண்ட பெற்றோர்கள் உருவாகுகின்றனர். பிள்ளைகள் பெருமை தேடி தர மட்டும் இல்லை. அதே சமயம் பிள்ளைகள் வெறும் ஜன தொகை பெருக்கத்திற்காக பெற்றெடுக்கப் படுபவர்களும் இல்லை. இங்கு இருக்கும் பிரச்சனையே "பெருமை" என்ற அந்த விஷச் சொல்லுக்கு நாம் சொல்லும் தவறான விளக்கம் தான். பெருமை என்ற சொல் - ஒருவன் சுயநலம் இல்லாமல் பிறர்க்கு உதவி செய்தால் உணரப் படவேண்டும். எந்த தொழிலை செய்தாலும் திறன் பட செய்தால் உணரப் படவேண்டும். பிறரை சந்தோஷப்படுத்தும் உண்மையான மனதை பார்த்து பெருமை உணரப் படவேண்டும். அதை விட்டு விட்டு, இவன் B.E படிக்கவில்லை, இவன் வெளி நாட்டு வேலைக்கு செல்லவில்லை, இவன் தானே தனக்கான பெண்ணை (அந்த பெண் மிக நல்லவளாக இருந்தாலும்) தேர்வு செய்து கொண்டான் - என்று எதற்கும் பெறாத விஷயங்களில் பெருமை என்னும் சொல் பாதிக்கப்படுவதாக உணரப் படுகிறது.

பெற்றவர்களுக்கு பிள்ளைகள் மேல் பாசம் இல்லை என்று நான் சொல்லவில்லை. பெற்றவர்களை விட பிள்ளைகளை பற்றி அதிகம் கவலைபடுபவர்கள் யாராக இருக்கமுடியும்? ஆனால் அந்த பாசம் என்ற சொல், பிள்ளைகள் மனதில் உள்ள ஆசைகள் அழிக்கும் ஆயுதமாக மாறும் பொது தான் பிரச்சனையே. பெற்றோர் பிள்ளைகளை பெற்றடுக்கும் பொது - இவன் நமக்கு இந்த விதத்தில் எல்லாம் பெருமை தேடித் தர வேண்டும் என்று சட்டங்கள் வைத்துக்கொண்டு இந்நாட்டில் வாழ்கின்றனர். பிள்ளைகள் பிறப்பது சட்டங்களோடு இல்லை. மனம், இரத்தம், சதை கொண்ட உயிரோடு. அந்த உயிர் மதிக்கப்பட வேண்டும். நம் ஆசைகள் அந்த பிள்ளைகள் மீதி தினிக்கப் படும்போது அங்கு "மனதின் கொலை" நடக்கிறது. நம் நாட்டில் எத்தனையோ பெற்றோர்கள் இதை உணராமல், இப்படி மன கொலைகளை செய்து வருகின்றனர். எல்லா பிள்ளைகளும் இந்த கொலை தாக்குதல்களை தாங்க முயற்சிப்பதில்லை. தோல்வியை சந்திக்கின்றனர். அதற்கு விதி என்று பெயரும் வைக்கின்றனர். இந்த பிள்ளைகள் நாளை அடுத்த கொலைகாரர்கள் ஆக (மனதின் கொலை) மாறுகின்றனர். இது பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றது.

இந்த blog நான் எழுதுவதன் எண்ணம் - இன்று பிள்ளைகளாக இருக்கும் எல்லோருமே நாளை பெற்றவர்களாக மாறுகின்றனர். அன்று நீங்களும் கொலைகாரர்களாக மாறி விடாதீர்கள் என்று சொல்லத்தான். நான் சொன்ன விஷயங்கள் எதற்கும் எடுத்துக்காட்டு தேவை இல்லை - ஏன் என்றால் இது இந்தியாவில் பிறந்த பல பிள்ளைகள் தினம் தினம் சந்திக்கும் ஒரு விஷயம். பிள்ளைகள் செய்யும் எல்லா விஷயங்களும் சரி என்று நான் சொல்ல வில்லை. ஆனால் அதில் சரியான விஷயங்களும் இருக்கும் என்று பெற்றோர் உணர வேண்டும். நான் வயதில் மூத்தவன், தான் சொன்னது மட்டும் தான் சரி என்ற எண்ணம் மிகவும் கொடுமையானது. அன்று முருகன் சொன்ன உபதேசத்தை சிவன் கேட்டார். கடவுளுகே அந்த நிலைமை என்றால், மனிதன் என்ன செய்ய வேண்டும். தன் தவறான எண்ணங்களை உணருவது தவறு இல்லை. சில பிள்ளைகள் போராடி தோற்கின்றனர், சிலர் தோல்வியை போராடாமல் ஏற்றுக் கொள்கின்றனர். எது நடந்தாலும் அங்கு சாகடிக்கப் படுவது உணர்வுகள் தான். அந்த நிலைமை மாற ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். சிந்தித்துப் பார்த்தால் வாழ்கை மிகவும் எளிமையானது. அந்த எளிமையான வாழ்க்கை போலியான எண்ணங்களால் குழப்பமானதாக மாற்றப்பட்டுள்ளது.

நான் எழுதி இருப்பது நான் பார்த்த சிலர் பற்றி மட்டுமே. எல்லோரும் இப்படி இருப்பதில்லை. பிள்ளைகள் வெறும் பொம்மைகள் அல்ல என்று புரிந்து கொண்ட எல்லா பெற்றோருக்கும், புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் என்றும் என் மதிப்புகள் உண்டு. ஏன் என்றால், தவறு செய்வது மனித இயல்பு. அதை மாற்றிக் கொள்ள எல்லோருக்கும் வாய்ப்புக்கள் உண்டு. போராடி இறந்த மனங்களுக்கு என் அனுதாபங்கள், போராடும் மனங்களுக்கு என் வாழ்த்துக்கள். போராடும் மனங்களுக்கு நான் சொல்லுவது – நாம் போராடும் விஷயம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தருவதாக இருக்க வேண்டும். மற்றவர்களை அழிக்க அல்ல.

ஏதோ ஒரு நாள் T.V. யில் உபன்யாசம் கேட்டது. தான் இறந்த பிறகு தனக்கு கடமை செய்ய பிள்ளை வேண்டும் என்று நினைப்பவன் தாழ்ந்தவன் ஆகிறான். நாட்டுக்காக பிள்ளை வேண்டும் என்று நினைப்பவன் தேவர்களுக்கு சமமாகிறான். நாம் தேவர்கள் போல் வாழ வேண்டியது இல்லை – மனிதனாக வாழ்ந்தால் போதும்.

Saturday, February 20, 2010

ஹைக்கூ


என்னிடம் வந்து விழுவதை எல்லாம்
     எடுத்து எரித்து விடுவார்களாமே
அப்படியானால் என்னிடமே
     விட்டு விடுங்கள்
அந்த குழந்தையை!!!
-- தாய் மடி ஆகிறது குப்பைத் தொட்டி







   

இந்த வீட்டையும் நல்லா
    கட்டி முடித்துவிட்டோம்
மனதில் மகிழ்ச்சியில்
    தன் குடிசையை நோக்கி  நடந்தாள் சித்தாள்









கனவில் உன் முகம்
   திடிக்கிட்டு எழுந்தேன்
அப்பொழுதுதான் புரிந்தது
   கலைந்தது கனவு மட்டும் அல்ல
இனி என் தூக்கமும் தான்.....
 
 
 
 
     



அன்று நீ சிரித்தாய், நான் சிரித்தேன்
இன்று நான் அழுதேன், நீ சிரிக்கிறாய்
---- நான் சிரிக்க வேண்டும் என்பதற்காக
புரியாமல் கோபப்பட்டேன்.
அதற்கும் சிரித்தாய்
     கோபத்திலும் நான் அழகு என்று சொல்லி..
 
 
 
 
 
 








அன்று கலிங்க போருக்கு பிறகு
      போரைத் துறந்தான் அசோகன்
இன்று கலிங்கமும் இல்லை, ராஜ்யங்களும் இல்லை
     ஆனால் போர் மட்டும் இருக்கிறது
என்ன செய்ய இன்று யாரும் அசோகன் இல்லையே!!!







ஒரு வேலையும் இல்ல, ஏன் யோசிப்பதற்குக் கூட ஒண்ணுமே இல்லன்னு நடந்து போயிட்டுருந்தப்போ, "நானும் வாலி, வைரமுத்து " அப்படிங்கற விபரீத எண்ணம் மனசுல எழுந்ததன் விளைவு தான் என்னுடைய சில ஹைகூக்கள்.